--> Skip to main content

”வாங்க... இயற்கைக்குத் திரும்புவோம்!”-(Nature)


'சென்னை தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் உள்ள 'தானியம் - ஆர்கானிக் ஸ்டோர்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா? தேன், தினை மாவு, வரகு, சாமை, கோதுமைப் புல், கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, நாவல் மரத் தேன், சுக்குக் கருப்பட்டி என இங்கு கிடைக்கும் அனைத்தும் இயற்கை. விவசாயத்தில் விளைவிக்கப்பட்டவை. இந்தக் கடையைப் பற்றி என் விகடனில் எழுதலாமே?’ - இது விகடன் வாசகர் ரமேஷ்பாபு நம்முடைய வாய்ஸ் ஸ்நாப்பில் தந்த தகவல்.

கடையின் உரிமையாளர் மதுசூதனனைச் சந்தித்தோம். ''சென்னை அடையாறைச் சேர்ந்தவன் நான். பி.டெக். முடித்துவிட்டு அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏ. படித்து முடித்ததும், லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அப்போது ஒரு புராஜெக்ட்டுக்காக மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவில் இருந்த விவசாயப் பண்ணைக்குச் சென்றேன். அங்கு உள்ள விவசாயிகள் ரசாயன உரங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் அனைத்துமே அதிக லாபத்துக்காக விஷமாக்கப்படுகின்றன என்ற உண்மை அப்போதுதான் எனக்குப் புரிந்தது. முன்பெல்லாம் சந்தைக்குக் கொண்டுவரப்படும் காலிஃபிளவரில் புழுக்கள் நிறைய இருக்கும். ஆனால், தற்போது விற்கப்படும் காலி ஃபிளவர்களில் புழுக்களே இருக்காது. காரணம், அவற்றைப் பறித்தவுடன் ரசாயனத் தொட்டியில் மூழ்க வைத்துப் பின்னரே விற்பனை செய்கிறார்கள். இதே நிலைதான், அனைத்து விளைபொருட்களுக்கும். கூடுதல் விளைச்சலைப் பெறுவதற்காகவும் விற்கும்போது ஃபிரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதற் காகவும் ரசாயனங்களைப் பயன்படுத்துவதால்

நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் அனைத்துமே நஞ்சாக மாறிவிட்டன. இதில் இருந்து எப்படி விடுபடுவது? பொதுமக்களை எப்படி விடுவிப்பது? என்று யோசித்ததன் விளைவே இந்த 'தானியம் ஆர்கானிக் ஸ்டோர்’.

இதை நான் உடனடியாக ஆரம்பித்துவிடவில்லை. முதலில் இயற்கை வழி வேளாண்மைப் பொருட் களைப் பயன்படுத்திப் பார்த்தேன். அதற்கு முன் நான் பயன்படுத்திய உணவுப் பொருட்களில் இத்தனை சுவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங் கள் பயன்படுத்த ஆரம்பித்ததும், உடல் நலத்திலும் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. அதன் பின்னர், இயற்கை விவசாயம் எங்கெங்கு நடைபெறுகிறது என்று தேட ஆரம்பித்தேன். கடையையும் ஆரம்பித்தேன். உத்தர காண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஈரோடு, திருநெல்வேலி, ஊட்டி போன்ற ஊர்களில் இருந்தும் இயற்கை விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்ய ஆரம்பித்தோம். ஆனால், தேன் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

தேன் வாங்கும்போது மிகவும் கவனத்துடனும் இருந்தோம். ஏனெனில் தேனீ வளர்ப்பவர்கள் தேனீயின் வீரியத்தை அதிகப்படுத்த, நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளைக் கொடுப்பார்கள். இதனால் தேனின் உண்மையான மருத்துவ குணம் போய்விடுகிறது. இதன் காரணமாக மலைத் தேனை வாங்கி விற்கிறோம்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வாங்குவதால் சாதாரண உணவுப் பொருட்களை விட 25 முதல் 30 சதவிகிதம் கூடுதலாக விலைவைத்து விற்கிறோம். ஆனால், மருத்துவமனைக்குச் செலவழிப்பதை ஒப்பிடும்போது இது ஒரு செலவே இல்லை.

மக்கள் மத்தியில் எங்கள் முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எங்களைப் பற்றித் தெரிந்துவைத்து இருக்கும் மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு எங்கள் உணவுப் பொருட்களைப் பரிந்துரைசெய்கிறார்கள். அதுபோல், இளம் தம்பதியினர் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும், பிறந்த குழந்தைகளுக்கு நல்ல உணவை க்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தி லும் எங்களைத் தேடிவருகிறார்கள்.

இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்திக் குறைவு என்று சொல்வதும் தவறு. நாம் அந்த வேளாண்மையைக் கைவிட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் நுட்பங்களை நாம் மறந்தே போய்விட்டோம். ஆனால், தற்«பாது இயற்கை ஆர்வலர்கள், விவசாயத்தில் முற்போக்குக் கொள்கை உடையவர்கள் பழைய மரபுகளை மீட்டு வருகின்றனர். இயற்கை வேளாண்மையை முறையாகச் செய்தால், ரசாயன உரங்களைப் பயன்படுத்தும்போது கிடைப்பதை விட அதிகமாக உற்பத்தியைப் பெருக்கலாம் என்று இயற்கை வேளாண் நிபுணர் நம்மாழ்வர் போன்றவர்கள் நிரூபித்து உள்ளனர்.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar