--> Skip to main content

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்..! -(Sindhuveliul indrum tamil oorpeyargal)



(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.

சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.

தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.

எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar