--> Skip to main content

உஷார்...துவைக்காத ஜீன்ஸ்...அரிப்பு ஏற்படும்-(THUVAIGATHA JEANS)


ஒரு வாரம் ஜீன்ஸ் பேண்ட்டை துவைக்காமல் போடுபவர்களா நீங்கள்...உங்களை விட ஒரு அழுக்கு மனிதர் இருக்க முடியாது. உங்களுக்கு அரிப்பு நோய் வருவதை யாராலும் தடுக்க முடியாது. கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தோல்நோய் துறை தலைவர் டாக்டர் ராமசாமி மருத்துவம் பகுதிக்காக பகிர்ந்து கொண்டது:

இப்போதைய இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விஷயம் தோல் நோய். பயன்படுத்தும் உடைகள், உணவு கலாச்சாரம் போன்றவை நமது உடலில் உள்ள தோல் பகுதியை பாதிக்கும் முக்கிய அம்சங்கள். குறிப்பாக நண்பர்களுக்கிடையே உடைகள் மாற்றி அணிந்து கொள்வதை பூரிப்பான விஷயமாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில்லை. உடை விஷயத்தில் நண்பனிடமிருந்து விலகியிருப்பது தான் உங்களுக்கு நல்லது. ஒரே உடையை பலர் மாற்றி, மாற்றி அணிவது அனைவருக்கும் தோல் நோயை உண்டாக்கும்.

கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களிடம் உடை மாற்றி அணியும் போக்கு அதிகமாக உள்ளது. அதேபோல் உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் ஈரம் காயாமல் அணியக்கூடாது. குளித்த பின் உடம்பை நன்கு துடைக்கவேண்டும். ஈரத்துடன் துணிகளை உடுத்தக்கூடாது. அதேபோல் ஒருவர் அணிந்த உடையை மற்றவர்கள் அணியக்கூடாது. இவ்வாறு செய்தால் தோலில் படர்தாமரை நோய் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். குறிப்பாக கால் இடுக்குகளில் அரிப்பு ஏற்பட்டு உள்ளாடைகள் சீல் வடிய ஆரம்பித்து விடும்.

இதனால் காயம் ஏற்பட்டு அந்த பகுதியே கருப்பாக மாறிவிடும். ஜீன்ஸ் பேண்ட் அணிபவர்களாக இருந்தாலும் அதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். படர்தாமரை என்னும் தோல் அரிப்பு நோய் ஏற்பட்டால் 21 நாட்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்தால் குணமாகி விடும்.

சொரியாசிஸ்:

தோல் வளர்ச்சி காரணமாக செதில் படை( சொரியாஸ்சஸ்) உண்டாகிறது. இந்த நோய் பரவாது. தலையில் வெள்ளையாக மீன் செதில் போல் சிறியதாக காணப்படும். முழங்கால், முழங்கைகளில் கூட வரும். இதனால் மூட்டு வலி வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துதல் கூடாது. புகை பிடித்தல் கூடாது. மன அழுத்தம் இருக்க கூடாது. இவைகள் இருந்தால் நோய் அதிகமாகும். இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியாது. மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வெண் குஷ்டம்:

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் வெள்ளை தழும்பு போல் காணப்படும். இது தொற்று நோய் கிடையாது. ஒருவருக்கு வந்தால் அடுத்தவருக்கு பரவாது. இந்த நோயை குணப்படுத்த அரசு மருத்துவமனையில் போதிய கருவிகள் உள்ளன. போட்டோ தெரபி ஒளிக்கதிர் மூலம் இதனை குணப்படுத்தி விடலாம்.

பார்த்தீனிய அலர்ஜி:

விவசாய நிலங்களில் பார்த்தீனிய செடிகள் அதிகமாக வளர்கின்றன. இந்த செடியில் உள்ள பூக்கள் காற்றில் பறந்து நமது உடம்பில் பட்டாலே சிலருக்கு அலர்ஜி ஏற்படும். பார்த்தீனிய அலர்ஜிக்கு ஏற்கனவே உள்ளானவர்கள் முழுக்கை சட்டை அணிந்து காட்டு பகுதிகளுக்கு செல்வது தான் நல்லது. பார்த்தீனிய அலர்ஜி ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar