--> Skip to main content

AAROKIYAMAGA VAZHA 52 VAZHIGAL



1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.
4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா? ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம்.
5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.
6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.
8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உணவுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம்.
11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்.
12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள்.
13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.
14. ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் ஃப்ரெஷ் ஆன பழங்கள் அல்லது வெஜிடபிள் ஜூஸ் அருந்தலாம்.
15. காபி, சோடா, கோலா ஆகிய பானங்களை அருந்த வேண்டாம்.
16. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உங்கள் மெனுவில் இடம் பெறட்டும்.
17. உப்பை அளவாகப் பயன்படுத்துங்கள்.
18. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவம் நெஞ்சில் நிழலாடுமே! அது அல்லவா ஆனந்தம்?
19. காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது.
20. சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும்.
21. நீங்கள் உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்.
22. எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும்.
23. தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
24. நீங்கள் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தரும் உணவைத் தேர்ந்தெடுங்கள்.
25. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என எதுவானாலும் நீங்களே நேரடியாகச் சென்று வாங்குங்கள். உற்றுப் பார்த்து, முகர்ந்து பார்த்து, தொட்டுப் பார்த்து ஒவ்வொன்றையும் வாங்கினால் எந்த நோய்க்கிருமியும் உங்களிடம் வாலாட்ட முடியாது.
26. மனம் வெறுமையாக இருந்தாலோ, களைப்பு ஏற்பட்டாலோ அதனை ஈடுகட்டுவதற்காகச் சிலர் சாக்லேட்களைச் சாப்பிடுவார்கள். ஜாலி மூடில் ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என வெளுத்துக் கட்டுவார்கள். இப்படி உங்கள் உணர்வுகளை உணவுடன் முடிச்சு போடாதீர்கள். பின்பு அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ‘மூடு’ எதுவாக இருந்தாலும் ஜூஸ் மட்டும் அருந்துங்கள்.
27. சினிமா தியேட்டரில் ‘சிப்ஸ்’ கொறிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அதற்கு ‘நோ’ சொல்லிவிட்டு ‘பாப்கார்ன்’ கொறியுங்கள்.
28. உணவுவேளையின் போது டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது பேப்பர் படிப்பது, காரசாரமான விவாதங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது? முழுக்கவனமும் உணவின் மீதே இருக்கட்டும்.
29. இரவு உணவின்போது ஒட்டுமொத்த குடும்பமும் டி.வி. முன் ஆஜராகி சாப்பாட்டை உள்ளே தள்ளுவது விரும்பத்தக்கதல்ல. அதைவிட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து கலகலப்பான மனநிலையில் சாப்பிடுங்கள்.
30. சுவாசப்பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து, மெதுமெதுவாக விடவும். இதுபோல் தினமும் பலமுறை செய்யுங்கள்.
31. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். காமெடி சினிமாக்கள் பார்ப்பது, சரமாரியாக ஜோக்குகள் அடிப்பது, உரக்கச் சிரிப்பது, நகைச்சுவை புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளுங்கள். தேவன், சாவி, சுஜாதா, சோ, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன், விவேக்... ஆஹா! நினைத்தாலே ஹி...ஹி...ஹி!
32. மது அருந்தும் ஆசாமியா நீங்கள்? உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
33. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியான மனநிலை தேவை. தூக்கம் கண்களைத் தழுவும்போது அமைதி உங்கள் நெஞ்சில் நிலவட்டும் குட்நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்!
34. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் டான்சிங், ஸ்விம்மிங், ரோலர் ஸ்கேட்டிங் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளுங்கள்.
35. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ‘வாக்கிங்’ செல்லுங்கள்.
36. கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் எளிய உடற்பயிற்சிகளுக்கு என்று காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
37. மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு? படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும்.
38. தினமும் தியானம் மனதுக்கு நல்லது.
39. ஒருபோதும் மூக்கு முட்ட சாப்பிடாதீர்கள்...
40. ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம்.
41. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது.
42. புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.
43. உங்கள் ஆழ்மனத்திற்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல்நிலையை மனதால் உணருங்கள்.
44. வேலை செய்ய, பொழுதுபோக்க என்று உங்கள் நேரத்தைச் சரியாகப் பகுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‘பேலன்ஸ்’ மிக முக்கியம்.
45. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள்.
46. நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். வாய்ப்பு இல்லாவிட்டால் டெலிபோனிலாவது பேசுங்கள். தனிமை விலகும், இனிமை கூடும்.
47. இதுவரை செய்யாவிட்டால் என்ன, இன்று முதலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
48. பிறரது தவறுகளை மன்னித்துவிடுங்கள். தேவையில்லாத மனபாரம் குறையும்.
49. முன்பின் தெரியாதவராக இருந்தால் என்ன, எல்லோரிடமும் நட்பு பாராட்டுங்கள்.
50. தினமும் குறைந்தது அரைமணி நேரம் குடும்பத்தினருடன் அரட்டை அடியுங்கள்.
51. ஒவ்வொரு நாளும் குறைந்து 15 நிமிடங்களாவது காது குளிர இசையைக் கேளுங்கள்.
52. நல்ல புத்தகம், நல்ல நண்பன். வாரம் ஒரு புத்தகமாவது படியுங்கள்
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar