--> Skip to main content

எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

‘எப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?!

ட்ரை இட்!

* உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள்

எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ காலரி உணவுகள் என்று கைவசம் வைத்துக்கொண்டு, சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுங்கள். ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்ற பசி உணர்வு விரட்டப்படும்... மனதில் இருந்தும்!

* எக்ஸர்சைஸ் வேண்டாம்

ட்ரெட் மில், அப்டமன், ஜிம், ஏரோபிக்ஸ் எதையும் கட்டாயத்தின் பேரில் செய்தால், நீண்ட நாள் தொடர முடியாது. ‘வொர்க் அவுட்’ என்பது அலுப்பாக இருந்தால், செய்ய வேண்டாம். அப்படியென்றால் சேர்ந்துள்ள கலோரிகளை எப்படிக் கரைப்பது..? சைக்ளிங் செல்லலாம், காரைக் கழுவலாம், தோட்ட வேலை பார்க்கலாம், ஃபிரிஸ்பீ விளையாடலாம், குழந்தைகளின் காஸ்ட்லி உடைகளை மட்டும் கையால் துவைக்கலாம்... இப்படி ஏதாவது ஒன்றை சுவீகரித்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் செய்தால் போதும்!

* ‘வாக்’ செல்லலாம் ஜாலியாக

எதுவுமே செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘வாக்’ செல்லச் சொன்னால் எப்படி என்கிறீர்களா..?! இப்படிச் செய்து பாருங்கள்..!

அலுவலகத்திற்கு பேருந்தில் செல்பவர்கள், முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்வதோடு, வீடும் திரும்பும்போதும் அப்படியே செய்யலாம்; அலுவலகத்தில் காரை கடைசியாக பார்க் செய்துவிட்டு, நடந்து போகும் தூரத்தை அதிகரித்துக்கொள்ளலாம்; வீடு, அலுவலகம், மால், ஹோட்டல் என்று எங்கு சென்றாலும், எஸ்கலேட்டர் தவிர்த்து படிகளைப் பயன்படுத்தலாம்; அருகில் உள்ள கடை, கோவில், பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்லலாம்.

அதிகம் இல்லை... காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் என, நடப்பதற்கு இது போல ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆக, ஒரு நாளில் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 10 நிமிடங்கள் உடற்பயிற்சி... 30 நிமிடங்கள் என்பது பிரமாதம் போங்கள்!

* தண்ணீர் குடித்தால் எடை குறையும்

எப்படி..? சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் பசியையும், ‘நிறையச் சாப்பிடணும்’ என்ற ஆர்வத்தையும் தணிக்கும். மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது, காரைக் கழுவும்போதோ, படிகளில் ஏறும்போது, ‘போதும்ப்பா...’ என்ற அயர்வைத் தராது!

* உங்கள் மிஸ் சொல்லித் தந்தார்களா... ஷேரிங்..

வீட்டில் மனைவி/கணவர், அலுவலகத்தில் நண்பர்/தோழி என்று உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்ள ஒரு பார்ட்னர் வைத்துக்கொள்ளுங்கள். பிடித்த உணவை டைனிங் டேபிளில் சந்திக்கும்போது, ‘அப்படியே சாப்பிடுவேன்!’ என்று தயாராகாமல், ‘பிரியாணியை ஷேர் செய்துக்கலாம்...’, ‘பனீர் சிக்கன் மசாலா 1/2 கேட்டு வாங்கிக்கலாம்...’ என்று பார்ட்னருடன் அதை ஷேர் செய்துவிடுங்கள். சாப்பிடவில்லை என்பதும் இல்லை, முழுதாகச் சாப்பிட்டதாகவும் இருக்காது!

* பிளேட், டம்ளர், பவுல்... சைஸைக் குறையுங்கள்

பெரிய தட்டில் இரண்டு கரண்டி சாதம் வைத்தால், கொஞ்சமாகத்தான் தெரியும். ‘அய்யோ இவ்ளோ கொஞ்சமா சாப்பிடுறோமே’ என்று மனம் பிதற்ற ஆரம்பித்துவிடும். அதுவே சிறிய தட்டில் அதே இரண்டு கரண்டி சாதம் வையுங்கள்... நிறையும் கண்களும்! அதுபோலவே, பொதுவாக நமக்கு டம்ளர், பவுலின் அடிப்பாகத்தைப் பார்த்துவிட்டால், போதுமான அளவு சாப்பிட்டுவிட்டோம் என்ற திருப்தி வந்துவிடும். எனவே, சின்ன டம்ளர், பவுலாக வைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் காலியாகிவிடும்!

* போர் அடிக்க நேரம் கொடுக்காதீர்கள்

வேலை, பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நேரம்தாம், அதிகம் பேருக்கு ஸ்நாக்ஸ், சாப்பாடு தேடும். எனவே, உங்களை ‘என்கேஜுடு’ ஆக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது சுவாரஸ்மான பொழுதுபோக்கில் மனதை மடைமாற்றுங்கள்.

இதில் முக்கியமான விஷயம்... பொழுதுபோக்க டிவியில் சமையல் நிகழ்ச்சி, ஐஸ் கிரீம் விளம்பரம் என்று பார்த்தாலோ, பைக்கில் ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் வடைக் கடையில் வண்டி பிரேக் போட்டாலோ... செல்லாது செல்லாது. உணவை நினைவுபடுத்தாத நிமிடங்களாக அவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்!

* குறைந்த எடை குறைந்ததாகவே இருக்க வேண்டும்

எடுத்த முயற்சிகளுக்குப் பலனாக எடை குறையப் பெற்றதும், ‘எப்டீ?!’ என்று மற்றவர்களைக் கேட்க வைத்ததும் குட்! ஆனால் அதற்குப் பின் ரசகுலா டப்பாவையோ, மட்டன் கிரேவியையோ பார்க்கும்போது, ‘அதான் ஆபீஸ் ஃபங்ஷன்/அண்ணி வீட்டுக் கல்யாணம் முடிஞ்சிருச்சுல்ல... கொஞ்சம் வெயிட் போட்டுக்கிட்டா பரவாயில்ல... அப்புறம் மெலிஞ்சுக்கலாம்!’ என்று நினைத்து நாக்கை சந்தோஷப்படுத்துபவர்கள் பலர். வேண்டாமே!

எடையைக் குறைத்து அதை அப்படியே பராமரித்து வந்தால், அதற்கான மெனக்கெடல்கள் ஆரம்பகட்டத்தைவிட குறைவாகவே தேவைப்படும். ஆனால் மீண்டும் எடை கூடிவிட்டால்... ‘மறுபடியும் முதல்லயிருந்தா?!’தான்! எனவே, கீப் ஃபிட்!

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar