--> Skip to main content

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்-(KEELANELLIUN MARUTHUVA GUNANGAL)


நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய  மூலிகைகள்  உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'.
இதற்கு  கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும்.
கீழாநெல்லியின் இலைகளில் 'பில்லாந்தின்' என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று. இலைகளுக்குக் கீழே நெல்லிக்காயின் சிறிய வடிவமாக இதன் காய்கள் இருப்பதால்தான் இதை 'கீழாநெல்லி' என்று அழைக்கிறார்கள். இதேபோன்று இலைகளுக்கு மேலே காய் காணப்படும் மற்றொரு மூலிகைக்குப் பெயர் மேலாநெல்லி. இதுவும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன். மேலும், கீழாநெல்லியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் விவரிக்கிறார்.
கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்:
மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி  உண்டு.
கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக்  கரைக்கும்.
ரத்தசோகையைச் சரிசெய்யும் .
கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
மலட்டுத் தன்மையைப் போக்கும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
மஞ்சள் காமாலை
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
சர்க்கரை நோய்
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
வயிற்றுப்புண்
1 டம்ளர் மோரில்,  கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
தலைவலி
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
சொறி, சிரங்கு
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
வெள்ளைப்படுதல்
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!
என்று கீழாநெல்லியின் மகத்துவத்தை அகத்தியர் குணபாடம் விவரிக்கின்றது. இயற்கை, நோய்களைப் போக்கும் அதிஅற்புதமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கை நமக்களித்த மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தி, நோய், நொடி இல்லாமல் வாழ்வோம்.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar